உள்ளூர் செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்

தோவாளையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

Published On 2022-10-16 08:03 GMT   |   Update On 2022-10-16 08:03 GMT
  • முன்பக்க கதவை உடைத்து கைவரிசை
  • கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை கமல்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் பாக்கிய சுப்பிரமணியம். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்தனது குழந்தையுடன் தோவாளையில் வசித்து வருகிறார்.

வீட்டின் மேல் மாடியில் அய்யம்மாளும் கீழ் பகுதியில் அவரது சகோதரி தயாவும் வசித்து வருகிறார்கள். தயாவின் கணவர் முருகானந்தம் மத்திய போலீஸ் படையில் வேலை செய்து வருகிறார்.

கணவர் சென்னையில் வேலை பார்ப்பதால் அய்யம்மாள் தனது குழந்தையுடன் தினசரி இரவில், சகோதரி தயா வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் வீட்டை பூட்டி விட்டு தயா வீட்டிற்கு அய்யம்மாள் வந்து விட்டார்.

இன்று அதிகாலை அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் அய்யம்மாள் தெரிவித்தார்.

அதன் பேரில் டவுன் துணை சூப்பிரண்டு நவீன்குமார் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News