தக்கலையில் குண்டும், குழியுமான சாலையால் பழுதான அரசு பஸ்
- பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர்.
- சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி:
தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கல்லங்குழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் படிக்கட்டு வரை நின்று கொண்டு பயணம் செய்தனர். பஸ் குமாரகோவில் அருகே வரும்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் டிவைடர் அருகே சாலையில் உள்ள ஒரு பெரிய பாதாள குழியில் டயர் இறங்கியது. பஸ்சின் படிக்கட்டுகள் தரையில் தட்டியது. இதனால் பஸ்சின் பட்டைகள் ஒடிந்தது.
திடீரென பஸ் ஒருபுறமாக சரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். டிரைவரின் மிதமான வேகத்தாலும், சாதுரியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு சென்றவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.