உள்ளூர் செய்திகள்

சிற்றார்-2 அணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு

Published On 2023-05-22 07:09 GMT   |   Update On 2023-05-22 07:09 GMT
  • சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போட்டோ எடுப்பதும், சினிமா சூட்டிங் எடுப்பதும் வழக்கம்.
  • 2 வாரங்களுக்கு முன்பு கேரளா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவர் இதே பகுதி அருகில் உயிரிழந்தான்

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் உள்ள சிற்றார்-2 அணை பகுதி மிகவும் இயற்கை அழகை கொண்ட பகுதியாகும். இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போட்டோ எடுப்பதும், சினிமா சூட்டிங் எடுப்பதும் வழக்கம்.

கேரள மாநிலம் எல்லையோரம் இருப்பதால், சிற்றார்-2 அணை பகுதிக்கு அந்த மாநில சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருவார்கள். நேற்று கேரளாவின் வெள்ளாடை மணக்காலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரதீப் (வயது 26), தனது நண்பர்களுடன் காரில் சிற்றார்-2 அணை பகுதிக்கு வந்தார்.

பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின் அவர்கள் வைகுண்டம் பகுதியில் குளிக்க இறங்கினார்கள். சிறிது நேரம் கழித்து நண்பர்கள் கரை ஏறிய நிலையில் பிரதீப் மட்டும் மாயமானார். அவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என கருதிய நண்பர்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பிரதீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் இருட்டி விட்டதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பிரதீப் உடல் தண்ணீரில் மிதந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிரதீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலியான பிரதீப், பட்டதாரி வாலிபர் ஆவார். தந்தை குடும்பத்தை பிரிந்து சென்றதால், அம்மாவிற்கு உறுதுணையாக பிரதீப் இருந்து வந்துள்ளார். அவரும் தற்போது பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி பொதுமக்கள் கூறும் போது, தொடர்ச்சியாக இப்பகுதியில் இதுபோன்ற சோக சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பலமுறை அரசு அதிகாரியிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் நடவடிக்கைகள் எடுக்க கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அரசு அதிக கவனம் செலுத்தி இப்பகுதி, அபாய பகுதி என அறிவித்து போர்டுகள் அமைக்கவும் மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என்றனர்.

2 வாரங்களுக்கு முன்பு கேரளா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவர் இதே பகுதி அருகில் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News