உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிப்பது பற்றி அனைத்து கட்சியினரிடம் கருத்து கேட்பு

Published On 2022-11-03 09:08 GMT   |   Update On 2022-11-03 09:08 GMT
  • போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
  • தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தற்பொழுது கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக அனைத்து கட்சியுடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தாசில்தார் சேகர், நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் தி.மு.க. கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. உள்பட வேறு சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் பிரச்சினைகளை அரசுக்கு கொண்டு செல்லும் வகையில் தான் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன்பே தொடர்ந்து போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள் இந்த பிரச்சனையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "நாகர்கோவில் கலெக்டர் அலுவலக முன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கலெக்டர் அலுவலகம் முன் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம். அண்ணா பஸ் நிலையம், மணிமேடை பகுதிகளில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அண்ணா கலையரங்கம் முன் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம்" என்றார்.

Tags:    

Similar News