உள்ளூர் செய்திகள்

வீடுகளில் உள்ள குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் - மாணவ-மாணவிகளுக்கு மேயர் மகேஷ் வேண்டுகோள்

Published On 2022-06-28 06:39 GMT   |   Update On 2022-06-28 06:39 GMT
  • அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு
  • ஒரு சில வீடுகளில் குப்பைகள் தரம் பிரிக்காமல் வழங்கி வருகிறார்கள்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நாகர்கோவில் கவிமணி பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது வீடுகளில் உள்ள குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து வீடுகளிலிருந்து குப்பைகள் பெறப்பட்டு வருகிறது.ஆனால் ஒரு சில வீடுகளில் குப்பைகள் தரம் பிரிக்காமல் வழங்கி வருகிறார்கள்.தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகளில் துர்நாற்றம் வீசக் கூடிய அளவில் உள்ளது.

அந்த குப்பைகளை பெண்கள் தொழிலாளர்கள் தான் தரம் பிரித்து வருகிறார்கள்.எனவே வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மாணவ மாணவிகள் இது குறித்து தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறவேண்டும். வீடுகளில் இரண்டு பாக்கெட்கள் வைத்து ஒரு பாக்கெட்டில் மக்கும் குப்பை மற்றொரு பாக்கெட்டில் மக்காத குப்பை போட வேண்டும்.நீங்களே குப்பைகளை தரம்பிரித்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இது குறித்து நீங்கள் பெற்றோர்களிடம் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக்கூற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதன் நோக்கம் குறித்து அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரி விஜய சந்திரன்,சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசுபள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News