பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் அடையாளம் தெரிந்தது
- குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் தீவிரம்
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை
நாகர்கோவில்:
நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகள் போன்றவற்றில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் வீட்டின் மீது நேற்று அதிகாலை 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜனதா பிரமுகர் வீடு என நினைத்து தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வருவதும், அதில் ஒருவன் இறங்கி பெட்ரோல் குண்டு வீசுவதும் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
தனிப்படையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் குற்றவாளிகள் பற்றிய அடையாளம் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வைத்து குற்ற வாளிகளை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர். எனவே அவர்களை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளதாக தெரிகிறது.