உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Published On 2023-09-20 07:36 GMT   |   Update On 2023-09-20 07:36 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
  • குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அவ்வப்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்துக்கரைகள், கால்வாய் கரைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த தூய்மை பணி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் பாலகத்துக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஏராளமான புற்களும், செடி-கொடிகளும் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. அந்த புதர்களை வெட்டி அகற்றும் பணி இன்று நடந்தது. இந்த தூய்மை பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பானது பரவலாக உள்ளதே தவிர ஒரே இடத்தில் மக்கள் மொத்தமாக பாதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் 1,165 பணியாளர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவியதையடுத்து குமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. 5 சோதனைச் சாவடிகளில் போலீசாருடன் சுகாதாரத்துறை பணியாளர்கள் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News