உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக இன்றும் கடலில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2022-06-29 07:45 GMT   |   Update On 2022-06-29 07:45 GMT
  • தீவிரவாதிகள் போல படகில் வந்த 4 பேரை மடக்கி போலீசார் விசாரணை
  • கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு

கன்னியாகுமரி:

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீசாரும் இணைந்து"சாகர்கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.

2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று மாலை வரை நடக்கிறது. 2-வது நாள் காலையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதி நவீன ரோந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் நவீன் நேற்று மாலை 6 மணிக்கு கூடங்குளம் கடல் பகுதியில் போலீசாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு படகில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்து கொண்டிருந்தனர். மாறுவேடத்தில் இருந்த அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் யார்? என்பது தெரியவந்தது.

அதில் 2 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் என்பதும், ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சுங்க இலாகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

கடல் வழியாக படகில் ஊடுருவியவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்

Tags:    

Similar News