உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் மணல் அள்ள வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - மாநில காங்கிரஸ் பொது செயலாளர் அறிக்கை

Published On 2022-07-19 06:55 GMT   |   Update On 2022-07-19 06:55 GMT
  • கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம்
  • வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்

கன்னியாகுமரி :

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மணல் ஆலைகள், கடற்கரையிலிருந்து கனிமங்கள் அள்ளியதால் கடலோர கிராமங்கள் கடல் அரிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் கடற்கரை கடலுக்குள் மூழ்கி விட்டது. கடலோர மக்களின் குடியிருப்புகள் பல ஊர்களில் அழிந்துவிட்டது.

கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் கடலோர மக்கள் மட்டுமல்லாமல் கடற்கரை கிராமத்தின் அருகில் உள்ள விவசாய மக்களும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் இயற்கை அரணாக இருக்கும் மணல் குன்றுகளை அழிப்பதால் தென்னகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடல்நீர் உட்புகுந்து விவசாயமும் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணமான மணல் ஆலை மணல் அள்ள அனுமதிக்கக்கூடாது என்று குமரி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு கடலோரங்களில் மணல் அள்ள குறும்பனை முதல் நீரோடி வரையுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். மக்களைப் பிரித்தாள வேண்டும் என்ற கொள்கையுடன் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

எனவே குமரி மாவட்ட கடற்கரையையும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் இந்திய மணல் ஆலைக்கு மணல் அள்ள வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News