உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உதயாஸ்தமன பூஜை

Published On 2023-08-12 08:01 GMT   |   Update On 2023-08-12 08:01 GMT
  • 12 நாட்கள் நடந்த ஆடி களப பூஜை நிறைவடைந்தது
  • இன்று காலை நடந்தது

கன்னியாகுமரி :

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக் கான ஆடி களப பூஜை கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு 11 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு வெள்ளிக்குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க வெள்ளி குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்று வெள்ளிக்குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயணரரூ முன்னிலையில் கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள். பின்னர் அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.

இந்த அன்னதானத்தை பக்தர்கள் சங்க பொருளாளர் வைகுண்டபெருமாள் தலைமையில் தலைவர் பால்சாமி தொடங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபா ராதனையும் அதைத் தத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.

இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு நடந்து வந்த இந்த களப பூஜை நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி இன்று காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடந்தது.

இதையொட்டி கோவிலின் வெளிப்பிரகாரம் உள்ள தெற்கு மண்டபத்தில் கோவில் மேல்சாந்திகள் யாககுண்டம் அமைத்து இந்த பூஜையை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினரும் பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்கத்தினரும் இணைந்து செய்து இருந்தனர்.

Tags:    

Similar News