பாரதிய ஜனதா பொறுப்புகளில் இருந்து பெண் கவுன்சிலர் ராஜினாமா
- குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மேடையில் அனுமதிக்காததால் முடிவு
- கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரோஸிட்டா, நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் திருமால் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மாவட்ட தலைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இது பாரதிய ஜனதாவி னர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் திருமால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற பகுதி 24-வது வார்டுக்குட்பட்ட பகுதி ஆகும்.
எனவே கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர ரோஜாப்பூ மாலை மற்றும் செங்கோலும் தயார் செய்து வைத்திருந்தார்.
ஆனால் ரோஸிட்டாவை மேடையில் அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணாமலைக்கு போட வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலை மற்றும் செங்கோலை வழங்க முடியவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை யில் தான் அண்ணாமலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலையை கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஊர்வலமாக சென்று வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்துள்ளனர்.