உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் உலக சுற்றுலா தின விழா

Published On 2023-09-25 07:40 GMT   |   Update On 2023-09-25 07:40 GMT
  • 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது
  • ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது

கன்னியாகுமரி :

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நாடு முழுவதும் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலா துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகம்இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News