உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தப்பணிகள் -கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2022-11-27 09:32 GMT   |   Update On 2022-11-27 09:32 GMT
  • சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: -

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர விற்கிணங்க, 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் கடந்த 9-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 287 வாக்குசாவடிகள், பர்கூர் தொகுதிக்குட்பட்ட 292 வாக்குசாடிவகள், கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடிகள், வேப்பனபள்ளி தொகுதிக்குட்பட்ட 312 வாக்குசாவடிகள், ஓசூர் தொகுதிக்குட்பட்ட 379 வாக்குசாவடிகள், தளி தொகுதிக்குட்பட்ட 302 வாக்குசாவடிகள் என மொத்தம் 1880 வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்ய படிவம் 6ஏ., இறந்தவர் மற்றும் நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்டவர்கள் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யவும், நகல் வாக்காளர் அட்டையாள அட்டை விண்ணப்பிக்கவும் படிவம் 8 மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6 பி., ஆகியவற்றை பூர்த்தி செய்து வாக்காளர் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் வழங்கலாம்.

எனவே, இளம் வாக்காளர்கள் (இன்று) ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் சிறப்பு முகாம்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார். 

Tags:    

Similar News