சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலுக்கு கே.எஸ்.அழகிரியே காரணம்-நெல்லையில் நிர்வாகிகள் பேட்டி
- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தான் காரணம். அவர் ஒரு தொண்டனை கன்னத்தில் அடித்ததால் தான் அங்கே மோதல் வெடித்தது.
- அவர் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம். இந்த சம்பவத்துக்கும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கும் கடுகளவும் சம்பந்தமும், காரணமும் கிடையாது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சந்திரசேகர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் குேளாரிந்தா, நீக்கப்பட்ட வட்டார தலைவர்கள் வாகைதுரை, ராமஜெயம், அலெக்ஸ், காலபெருமாள், நளன், நகர தலைவர் ரீமாபைசல், முத்துகிருஷ்ணன், ஜார்ஜ்வில்சன் ஆகியோர் பாளை கே.டி.சி.நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மாநில தலைவர் கே. எஸ். அழகிரி தான் காரணம். அவர் ஒரு தொண்டனை கன்னத்தில் அடித்ததால் தான் அங்கே மோதல் வெடித்தது.
நாங்கள் நீக்கப்பட்ட வட்டாரத் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது ஆதரவாளர்களை திரட்டி சத்தியமூர்த்தி பவனில் போய் நியாயம் கேட்க சென்றோம். ஆனால் இதற்கு நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன் தான் காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். அது உண்மை கிடையாது. அவருக்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
பிரச்சனை நடந்த உடன் ரூபி மனோகரன் எங்களை அழைத்து கண்டித்து நீங்கள் பிரச்சனை செய்தால் எனது தொகுதிக்கு தான் கெட்ட பெயர், எனது பேச்சைக் கேளுங்கள் என்று அனைவரையும் சத்தம் போட்டு கண்டித்து ஒரு இடத்தில் அமைதியாக இருக்க வைத்தார். ஆனால் மாநிலத் தலைவர் எங்களை எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் அழைக்காமல் காரில் ஏறி சென்றார். அப்போது தான் நாங்களெல்லாம் ஓடிப்போய் அவர் சென்ற காரை மறித்தோம். எங்களுக்கு ஒரு பதில் சொல்லி விட்டு போங்கள் என்று கூறினோம்.
அவர் பதில் கூறியிருக்கலாம். அல்லது 2, 3 நாளைக்கு பிறகு கூறுகிறேன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் எங்களை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். பின்னர் 4, 5 பேர் அங்கு வந்து கம்பாளும், கம்பியாலும் எங்களை அடித்தார்கள். இந்த பிரச்சனை வளர முழுக்க முழுக்க காரணம் கே.எஸ் அழகிரி தான்.
அவர் இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம். இந்த சம்பவத்துக்கும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கும் கடுகளவும் சம்பந்தமும், காரணமும் கிடையாது.
நாங்கள் எங்கள் பணத்தை செலவு செய்து வந்துள்ளோம். எங்களது கோரிக்கையை நாங்கள் தான் கேட்போம். ரூபி மனோகரன் ஏன் எங்களுக்கு பணம் தர வேண்டும், அவசியமே இல்லை. ஆகவே காங்கிரஸ் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இந்த மாநிலத் தலைவரை மாற்றினால் மட்டுமே நடைபெறும். அவர் முழுக்க முழுக்க மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை மட்டும் மாவட்ட தலைவராக போடுகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை வட்டார தலைவராக போடுகிறார். அதனால்தான் காங்கிரஸ் கட்சி பின்னோக்கி இன்னும் சென்று கொண்டிருக்கிறது. உடனே மாநில தலைவரை மாற்றுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.