உள்ளூர் செய்திகள்

கோவையை கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

Published On 2023-04-29 09:21 GMT   |   Update On 2023-04-29 09:21 GMT
  • 2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
  • கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு இன்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தானியங்கி மஞ்சப்பை மற்றும் துணிப்பை விற்பனை எந்திரத்தை தொடங்கி வைத்து பைகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கமானது கார்பன் நியூட்ரல் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதனை அதிகப்படுத்த உள்ளோம். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 10 கோடி மரங்கள் நடவு செய்யப்படும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். அதனை மீறி வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் அதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். மரங்களை நடவு செய்வது மட்டும் முக்கியமில்லை. நட்ட மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும். 2050-ம் ஆண்டுக்குள் கோவை கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News