உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 'ஹெலிகாப்டர்' சுற்றுலா திட்டத்துக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-05-12 03:15 GMT   |   Update On 2023-05-12 03:15 GMT
  • சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
  • வனத்துறை ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

சென்னை:

சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதன்படி சுற்றுலாவாசிகள் மலைக்கு மேல் ஹெலிகாப்டரில் பறந்து இயற்கை அழகை ரசிக்கலாம். இந்த திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை செயல்பட இருந்தது.

இந்தநிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முருகவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், மலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறப்பது அபாயகரமானது. அதுமட்டுமல்ல விலங்குகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகும். கடுமையாக பாதிக்கும். இந்த திட்டம் குறித்து அரசுக்கு தவறாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து இதுவரை அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல வனத்துறையும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை'' என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து வருகிற 17-ந்தேதி வரை எந்த முடிவையும் அரசு எடுக்கக்கூடாது. செயல்படுத்தவும் கூடாது என்று தடை விதித்து, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News