புதர்மண்டி பாழடைந்து காணப்படும் பொது கழிப்பறை கட்டிடம்
- சோழவந்தான் அருகே பொது கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி பாழடைந்து காணப்படுகிறது.
- சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தெருவில் வயலோர பகுதியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
அப்போது தண்ணீர் மற்றும் மின் வசதிகள் இருந்ததால் பொதுமக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் மேற்கண்ட வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அரசும் கண்டுகொள்ளவில்லை.
இதன் காரணமாக பொது கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்த புதராக மாறியுள்ளது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளன
. மேலும் கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கட்டிடம் மாறியுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஆரம்ப காலத்தில் இந்த கழிப்பறை கட்டிடத்தை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் வசதி இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் இருப்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.