விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்
- மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்.
- கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரை வழங்கினார்.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறி களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.
பெண்களும், இளை ஞர்களும் வேலை வேண்டி விண்ணப்பித்து வருகின்ற னர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும்.
மேலும் அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஷீலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.