மதுரை: மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ23.83 லட்சம் அபராதம் வசூல்
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ23.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
மதுரை
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் துாத்துக்குடி மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒட்டநத்தம், ஒட்டப்பிடாரம், கங்கை கொண்டான், தாழையூத்து, வெள்ளாரம், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, துாத்துக்குடி, புதியம்புதூர், முப்புலிவெட்டி, அய்யன் பொம்மையபுரம், விளாத்தி குளம் மற்றும் இருவேலி ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 17 இடங்களில் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.22 லட்சத்து 18 ஆயிரத்து 576 அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.
மதுரை கோட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வர்களிடம் ஒட்டு மொத்தமாக ரூ.23லட்சத்து 83ஆயிரத்து 576 அபராதம் பெறப்பட்டது. மதுரை கோட்டத்தில் மின்திருட்டு தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்க பிரிவு செயல் பொறியாளர் தொலைபேசி எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.