- ஜி.எஸ்.டி. அதிகாரி போல் நடித்து முதியவரிடம் நூதன திருடப்பட்டது.
- நகை வாங்கி வந்தவரிடம் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளனர்.
மதுரை
மதுரை நாராயணபுரம், ஜே.கே. நகரை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (வயது 68). இவர் இரவு மதுரை மேலமாசி வீதியில் உள்ள நகை கடையில், குடும்பத்தினர் இல்ல திருமண விழாவுக்காக நகைகள் வாங்கினார். அதன் பிறகு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அவரை மேல மாசி வீதி, மதனகோபாலசாமி கோவில் எதிரே, மர்ம நபர் ஒருவர் வழிமறித்தார். அவர் நான் ஒரு ஜி.எஸ்.டி அதிகாரி. உங்களின் நகைகளை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதனை நம்பிய சூரிய மூர்த்தியும் தான் வாங்கிய நகைகளை அவரிடம் கொடுத்தார். அவற்றை சரிபார்ப்பது போல் நடித்த அந்த நபர், மீண்டும் நகைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து சூரியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தான் வாங்கிய நகைகளை சரிபார்த்தார்.அப்போதுதான் ரூ.70 ஆயிரம் மதிப்புடைய 20 கிராம் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியமூர்த்தி, இது பற்றி மதுரை தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை ஏமாற்றி எடுத்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.