உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை

Published On 2022-12-06 09:26 GMT   |   Update On 2022-12-06 09:26 GMT
  • மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
  • கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்’ என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரை

மதுரை கே.கே. நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதில் 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம், செராமிக் பற்கள் கட்டுதல், காக்ளியர் இம்பிளான்ட் ஆகிய சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

அதற்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் கொடுத்து உள்ள உள்ள பதிலில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை. இருந்த போதிலும் அங்கு விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.

இது தவிர மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செராமிக் பற்கள் கட்டுதல், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் குழந்தை இல்லா தம்பதி யர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதி யாகவும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சில குடும்பத்தை விவகாரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.

எனவே 'எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்ட தனியார் மையங்கள், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றன. எனவே அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே குழந்தையை பாக்கியம் கிட்டும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் 155 தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இல்லை.

எனவே மதுரை அரசினர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் குழந்தை இல்லாத ஏழை- எளிய தம்பதிகளும் இங்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற இயலும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News