மகா சிவராத்திரி பெருவிழா : தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை
- உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூா்:
இன்று மஹா சிவராத்திரி பெருவிழா நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் இன்று சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஒரே நாளில் வந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அதன்படி உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாநிலம், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள் ,அரிசி மாவு , பொடி திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கபட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலையில் நந்தி மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட பரதநாட்டியர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் மாலையில் நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஒருவழி பாதையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.