பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை-வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பு
- அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
- புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.
நெல்லை:
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இரவு தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.
உற்சாக வரவேற்பு
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூரில் தங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று காலை சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அங்கு பொன்விழா நுழைவுவாயிலை திறந்து வைத்த அவர், பொன்விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். முன்னதாக அவருக்கு சிவகிரி இரட்டை பாலத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்பெரும் விழா
பின்னர் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா, தனுஷ்குமார் எம்.பி., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.