உள்ளூர் செய்திகள்

கோடை காலத்திற்கு 18 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவை- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Published On 2023-03-08 04:44 GMT   |   Update On 2023-03-08 04:44 GMT
  • கடந்த 4-ந்தேதி அதிகபட்ச மின்சார நுகர்வு 17 ஆயிரத்து 584 மெகாவாட்டாக இருந்தது.
  • தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டிலிருந்து 17 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 4-ந்தேதி அதிகபட்ச மின்சார நுகர்வு 17 ஆயிரத்து 584 மெகாவாட்டாக இருந்தது. இந்த அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி அன்று பதிவான 17 ஆயிரத்து 563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வு எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ளப்பட்டது. வரக்கூடிய நாட்களில் மின்சார நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:-

தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டிலிருந்து 17 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 18 ஆயிரத்து 500 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News