நாமக்கல்லில் வெறிநாய் கடித்து 29 ஆடுகள் சாவு
- நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம் பஞ்சாயத்து, விட்டப்ப நாயக்கம்பட்டி கிராமம், ராசா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த 8-ந் தேதி இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் தாக்கியதால், பாஸ்கரனுக்கு சொந்தமான 29 ஆடுகள் மற்றும் 5 கோழிகள் இறந்துவிட்டன.
அவரது தோட்டத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டி, இறந்த ஆடுகள் மற்றும் கோழிகள் புதைக்கப்பட்டன. பாஸ்கரன் குடும்பத்தினர் ஆடு வளர்ப்பை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். 29 ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.