நல்லூர் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி
- தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் ஓட கிணத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58).இவர் இரும்பு பாலம் அருகே உள்ள தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். நல்லூர் அருகே தொட்டியம் தோட்டம் 4 ரோடு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சக்திவேல் (39) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மோகன் பிரசாந்த் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.