உள்ளூர் செய்திகள்

வீடுகள் அகற்றப்படுவதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் செய்த காட்சி.

மேல்மலையனூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்-சாலை மறியல்

Published On 2022-07-26 07:36 GMT   |   Update On 2022-07-26 07:36 GMT
  • மேல்மலையனூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்துக்கு அருகில் இருந்த இடங்களில் 83 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதை உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி வருவாய் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது 10 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கி வருவதால் அதுவரையில் தங்களுக்கு கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இந்த கால அவகாசம் மு டிவடைந்துவிட்டதால் தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன் தலைமையில் 10 மணிக்கு சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உயர்நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.எனவே ஆக்கிரமிப்புகளை நீங்களாகவே அகற்றிக்கொள்ளுங்கள். உங்கள் நிலை குறித்து மேலிடத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறியவுடன் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்பு வீடுகளிருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் எடுத்தவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் கடைகள் என 77ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News