நிலக்கோட்டை : புதிய செயலி பயன்பாட்டால் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் அவதி
- புதிய செயலி அறிமுகப்படுத்தியதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
- குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
ஊராட்சிகளில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைதிட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் போதுமான வருமானம் கிடைப்பதால் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலை நேரத்தை 9 மணிமுதல் 5 மணிவரை என்பதை 10 மணிமுதல் 4 மணிவரை என குறைக்கவேண்டும் என பயனாளிகள் கேட்டுெகாண்டிருந்தனர். இந்தநிலையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் காலை 8.30 மணிக்கு பதிவேடு தானாக திறந்துகொள்ளும். 9 மணிவரை மட்டுமே பதிய முடியும்.
இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலை 8 மணிக்கு வரவேண்டும் என பணித்தள பொறுப்பாளர்கள் அறிவுறுத்தினர். குடும்ப சூழ்நிலையால் 9 மணிக்குமேல் வருவதால் எஸ்.எம்.எஸ் என்ற செயலியில் பெயர் பதிய முடியவில்லை. இதனால் சம்பளம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு உணவு சமைத்து கொடுத்து காலை 8 மணிக்கு வருவது என்பது இயலாத காரியம். எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும். முறையாக சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா கூறுகையில், அரசு கடந்தமாதம் ஒரு புதிய செயலியை அமல்படுத்தி உள்ளது. இதில் 9 மணிக்குள் மட்டுமே பயனாளிகள் பெயரை பதிய முடியும். எனவே அனைத்து 100 நாள் பணியாளர்களும் 8 மணிக்கு வரவேண்டும் என நிர்பந்திக்கவேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.