தி.மு.க. ஆட்சியை பாராட்டிய ஓ.பன்னீர்செல்வம் மகன்
- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தார்.
- என் மகன் கதிர்ஆனந்த் எம்.பி.யாக இருப்பதால் டெல்லியில் ரவீந்திரநாத்தை சந்தித்து இருக்கிறேன்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. சந்தித்த ரகசியத்தை அமைச்சர் துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டார்.
இதுகுறித்து தி.மு.க. கூட்டம் ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய விசயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-
நானும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரு அறையில் உட்கார்ந்து இருந்தோம். அப்போது அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தார். அவர் எம்.பி. என்பதால் வரச்சொல்லுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் உள்ளே வந்ததும் துண்டு போட்டார். புத்தகம் கொடுத்தார்.
என் மகன் கதிர்ஆனந்த் எம்.பி.யாக இருப்பதால் டெல்லியில் ரவீந்திரநாத்தை சந்தித்து இருக்கிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்த ரவீந்திரநாத், அய்யா... நீங்க ரொம்ப நல்லா ஆட்சி நடத்துறீங்க மகிழ்ச்சி அய்யா... ஆட்சி நல்லா இருக்குதுய்யா என்றார். அருகில் இருந்த நான் ஆசீர்வாதம் போ என்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
துரைமுருகனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.