கடற்கரை- தாம்பரம் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
- மாலை 5 மணிக்கு பின்னர் ஞாயிறு கால அட்டவணையின்படி ரெயில் சேவை வழக்கமாக இயங்கும்.
சென்னை:
சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக நேற்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மொத்தம் 34 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு பின்னர் ஞாயிறு கால அட்டவணையின்படி ரெயில் சேவை வழக்கமாக இயங்கும்.
மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் நலன் கருதி கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டுமென தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பயணிகள் சரியான திட்டமிடலுடன் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.