சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வசதியாக சென்னை-கொச்சி இடையே கூடுதல் விமான சேவை
- இந்த ஆண்டு விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கூடுதல் விமான சேவை ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி தை முதல் நாள் வரை மகர ஜோதியை காண செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் சபரிமலையில் திறக்கும் நடை மகரஜோதி வரை குறிப்பிட்ட காலங்களில் மட்டும் திறப்பார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடியுடன் செல்ல இந்திய விமான நிலைய ஆணையகம், விமான ஆணையக பாதுகாப்பு துறை அனுமதி அளித்து உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் தற்போது, விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக தினமும் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை என 10 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சபரிமலை நடை திறப்புக்காக 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள் என 14 விமான சேவைகள் இயக்கப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சென்னையில் இருந்து கொச்சிக்கு 8 புறப்பாடு விமானங்கள், கொச்சியில் இருந்து சென்னைக்கு 8 வருகை விமானங்கள் என விமான சேவை அதிகரித்து உள்ளது. மேலும் சென்னை- பெங்களூரு- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் என மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு, சென்னை- கொச்சி இடையே நேரடி விமான சேவையும் உள்ளது. இந்த ஆண்டு விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து, இரவு 9:25 மணி வரையில், 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியில் இருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமான சேவை ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.