தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை போட்டியிட வைப்போம்- இயக்குனர் பா.ரஞ்சித்

Published On 2024-11-17 01:55 GMT   |   Update On 2024-11-17 01:55 GMT
  • கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
  • பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இந்தியக்குடியரசு கட்சியின் மாநில தலைவர் தமிழரசன், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டு, விசாரணையில் இழுக்கப்படாமல் உள்ளவர்களை மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டரீதியான போராட்டத்தை தொடர வேண்டும். இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது கேள்வியை எழுப்புகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எந்த அரசு ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் நாங்கள் கேள்வியை கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.

பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரின் மனைவியை நாம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்கலாம். வெற்றி, தோல்வி விசயமல்ல. அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்தில் அனுப்புவதை நாம் திட்டமாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 3 சதவீதம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆளும் போது, நாம் ஏன் ஆள முடியாது. அரசியல் அதிகாரத்தில் நமக்கான தேவைகளை அடைய திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News