உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஓசூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஓசூரில் பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார் மாவட்ட எஸ்.பி. தகவல்

Published On 2022-09-01 09:32 GMT   |   Update On 2022-09-01 09:32 GMT
  • ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • 500 சிலைகள் 4-ந்தேதி கரைக்கப்படவுள்ளன.

ஓசூர்,

ஓசூரில் விநாயகர் சதுர்த்தி பந்தோபஸ்து மற்றும் சிலை ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை அருகே கொடி அணிவகுப்பை, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகூர் தொடங்கிவைத்தார்.

மேலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையருகே நிறைவடைந்த இந்த அணிவகுப்பினை, அவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.

முன்னதாக, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விரிவான பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்களும், இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 சிலைகள் வருகிற 3-ந்தேதியும், அதேபோல் சுமார் 500 சிலைகள் 4-ந்தேதியும் கரைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள சிலைகளும் கரைக்கப்படும்.

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, 1, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன அதில், ஓசூரில் 2 இடங்கள் பதற்றமான பகுதியாகும்.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் மற்றும் ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News