நெல்லையில் மாடியில் இருந்து தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் சாவு
- நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற புரோட்டா மாஸ்டர் மொட்டைமாடியில் படுத்து உறங்கி உள்ளார்.
- தாய் மற்றும் சகோதரன் எழுந்து வந்து பார்த்தபோது கணேசன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
நெல்லை:
தச்சநல்லூர் சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உச்சிமுத்து. இவரது மகன் கணேசன் (வயது 25). இவர் உடையார்பட்டி பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணேசன் இரண்டாவது தளத்திலுள்ள மொட்டைமாடியில் படுத்து உறங்கி உள்ளார்.
இன்று அதிகாலை யில் இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்த கணேசன் தூக்கக்கலக்கத்தில் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணேசனின் தாய் மற்றும் சகோதரன் எழுந்து வந்து பார்த்தபோது கணேசன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.