நெல்லை விழாவில் 8-ந்தேதி பங்கேற்பு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்-பிரமாண்ட மேடை, பந்தல் தயாராகிறது
- வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி இரவு நெல்லை வருகிறார்.
- வரவேற்பு ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
மு.க.ஸ்டாலின் வருகை
அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 7-ந்தேதி இரவு நெல்லை வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மதியம் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ள ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து நெல்லை திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று இரவு தாழையூத்து பகுதியில் தங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
நலத்திட்ட உதவிகள்
இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, திருநங்கைகள் தொழில் தொடங்க கடன் உதவி, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். முன்னதாக மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மேடை போலீஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அவர் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உற்சாக வரவேற்பு
இதனையொட்டி அங்கு இருக்கைகள் அமைக்கும் பணி, பிரமாண்ட மேடை, மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாகனங்கள் பார்க்கிங், குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக 7-ந்தேதி மாலை குமரியில் இருந்து வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
சுவர் விளம்பரங்கள்
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதேபோல் மாநகர பகுதியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடங்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் சார்பில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகிறது.