சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
- சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
- இறந்தவர்கள் உடலை தூக்கிக் கொண்டு இச்சாலையில் செல்ல முடியாமல், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்–கரையிருப்பு-புறாக்கிராமம் இடையே மண் சாலை அமைந்துள்ளது. கீழக்–கரையிருப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அன்றாடம் இச்சாலை வழியேதான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் இச்சாலை வழியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்கிரா–மத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உடலை தூக்கிக் கொண்டு சேறும் சகதியுமான இச்சாலையில் செல்ல முடியாமலும், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமாகி கிடக்கும் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை சீரமைத்து தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்த சாலையை சீரமைத்துத்தர அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.