உள்ளூர் செய்திகள்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம்

Published On 2023-02-18 09:03 GMT   |   Update On 2023-02-18 09:03 GMT
  • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும்.

பெரம்பலூர்

தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8925533976, 8925533977 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News