உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்

Published On 2022-11-26 09:37 GMT   |   Update On 2022-11-26 09:37 GMT
  • சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.
  • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

பெரம்பலூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஊர்வலம் சென்றனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். காய்கறி, உணவூட்ட செலவினத்தை அந்தந்த மாதத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News