சேவை குறைபாடு-பாதிக்கப்பட்ட வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் நிவாரணம் வழங்க உத்தரவு
- சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் நிவாரணம் வழங்க உத்தரவிடபட்டுள்ளது
- செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் பாண்டியன். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ம்ததி சாம்சங் செல்போன் ரூ.15 ஆயிரம் செலுத்தி அமேசான் விற்பனை நிறுவனம் மூலம் வாங்கினார். இந்த செல்போன் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம்தேதி பெரம்பலூரில் உள்ள சாம்சாங் செல்போன் கிளை சர்வீஸ் சென்டர் சென்று செல்போனை பழுது நீக்க கோரிக்கை விடுத்தார். அப்போது சர்வீஸ் சென்டர் மேலாளர் செல்போனை பழுதுநீக்க ரூ. 236 ஆகும் என கூறி போனை வாங்கிவைத்துக்கொண்டு பழுதினை சரி செய்து மறுநாளான 13ம்தேதி கொடுத்தார். ஆனால் செல்போனை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு மணிநேரத்தில் மீண்டும் செல்போன் பழுது ஏற்பட்டது.
இதனால் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளரிடம் சென்று வக்கீல் பாண்டியன் ஏன் செல்போன் மீண்டும் பழுதாகிவிட்டது. இதனை சரி செய்து தரவேண்டும் என கூறியுள்ளார். அந்த செல்போனை பெற்று பரிசோதனை செய்த கிளை மேலாளர் செல்போனை சரி செய்ய ரூ. 7 ஆயிரத்து 200 தரவேண்டும் என கூறினார். அதற்கு செல்போனுக்கு வாரண்டி உள்ளது, ஆகையால் நீங்கள் இலவசமாக செல்போனை சரி செய்து தரவேண்டும் என வக்கீல் பாண்டியன் கூறியுள்ளார். ஆனால் இலவசமாக சரி செய்யமுடியாது எனவும், வேண்டுமென்றால் எங்களது ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளரிடம் கேட்டு பார்க்கிறேன் என கூறியுள்ளார்
. பின்னர் செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் சர்வீஸ் சென்டரில் செல்போனை சரியாக பழுதுநீக்கி தரவில்லை. மேலும் கூடுதல் பணம் கேட்கின்றனர். எனவே இலவசமாக செல்போனை பழுதுநீக்கி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வக்கீல் பாண்டியன் ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் பாதிக்கப்பட்ட பாண்டியனுக்கு எந்தவித பதில் மனு அளிக்காமலும், அலைக்கலைப்பு செய்ததோடு, செல்போனை பழுதுநீக்கி தரவில்லை. செல்போனையும் தரவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த வக்கீல் பாண்டியன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் சேவை குறைபாடு புரிந்த செல்போன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மனுதாரர் வக்கீல் பாண்டியனுக்கு நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.