உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் - மத்திய இணை அமைச்சர் தகவல்

Published On 2022-10-09 09:28 GMT   |   Update On 2022-10-09 09:28 GMT
  • மத்திய அரசு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்
  • மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெரம்பலூர்:

மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல்துறை இணை அமைச்சர் பிரதிமா பௌமிக், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில், ஒரு குடியிருப்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை துவங்கிவைத்து, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் அமைச்சர் பிரதிமா பௌமிக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நாட்டின் கட்டமைப்புகளான சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற பகுதிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் நோக்கில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 2020 -21 ஆம் நிதி ஆண்டில் 25 கிராம ஊராட்சிகளில் 20,118 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் மொத்தம் உள்ள 776 குடியிருப்புகளில் 205 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் ஏற்கனவே உள்ளது. மீதமுள்ள 571 வீடுகளுக்கும் ரூ.46.06 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சியாக கவுள்பாளையம் உள்ளது.

போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. போதையிலிருந்து மீண்டவர்கள் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்துக் கொண்டால் அவர்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவியும், தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கோட்டாட்சியர் ச.நிறைமதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கணபதி, மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News