உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி வருகையால் உச்சகட்ட பாதுகாப்பு- முதுமலையில் டிரோன் பறக்க தடை

Published On 2023-04-06 08:41 GMT   |   Update On 2023-04-06 08:41 GMT
  • முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
  • பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு செல்கிறார்.

அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிப்பதோடு, அவர்களை பொன்னாடை போர்த்தியும் கவுரவிக்க உள்ளார்.

தொடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளையும் அவர் பார்வையிடுகிறார்.

பின்னர் யானைகள் முகாமுக்கு செல்லும் பிரதமர் மோடி, யானைகள் பராமரிக்கும் முறை, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

மேலும் யானை பாகன்களுடன் கலந்துரையாடி, வளர்ப்பு யானைகளுக்கு கரும்பும் வழங்குகிறார்.

பின்னர் முதுமலை வனத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர் புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

இதற்கிடையே முதுமலைக்கு பிரதமர் வருவதையொட்டி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று முதுமலைக்கு வந்தனர்.

அவர்கள் முதுமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் மசினகுடியில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினர்.

இந்த ஆய்வின்போது நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் வித்யா உள்பட பலர் இருந்தனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் முதுமலை மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர்.

பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மைசூரில் இருந்து முதுமலை வர உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர சோதனை சாவடி, அடர்ந்த வனப்பகுதி, மலையேற்றம் செல்லும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதுமலை வனப்பகுதி என்பதால் அதிவிரைவுப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

மேலும் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News