உள்ளூர் செய்திகள்

விழாவில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவர் பிரதமர் மோடி- அண்ணாமலை பேச்சு

Published On 2023-04-16 08:18 GMT   |   Update On 2023-04-16 10:11 GMT
  • டெல்டாவில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
  • நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும்.

தஞ்சாவூர்:

டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொடுத்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், உறுதுணையாக இருந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கும் தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நல சங்கம் சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடந்தது.

விழாவுக்கு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டு அரசிதழில் வெளியிட்டது பா.ஜ.க. அரசு தான்.

விவசாயிகளுக்கு பிரச்சினை வருகிறது என்பதற்காக நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை பிரதமரும், மத்திய மந்திரியும் ஒரே முடிவாக எடுத்து 48 மணி நேரத்தில் ரத்து செய்துள்ளனர்.

விவசாயிகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதம் எழுதாமல் என்னை தொலைபேசி மூலம் உரிமையாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1960-ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 9 லட்சம் எக்டேரில் இருந்து 6 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. அதேபோல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் எக்டேரில் இருந்து 3.69 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. 1970-ம் ஆண்டில் 61 லட்சம் எக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் எக்டேராக மாறி, 16 லட்சம் எக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா?

அதேபோல் இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி மாத வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். விவசாயிகள் மாற்றி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும்.

டெல்டாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசவும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

விவசாயிகளை காப்பதற்காக பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், உரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அண்ணாமலைக்கும், கருப்பு முருகானந்தத்துக்கும் மலர் கிரீடம், மாலை அணிவித்து விவசாய தமிழர் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டினர்.

இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட ஓ.பி.சி. செயலாளர் முத்துராமலிங்கம், ஐ.டி. மற்றும் எஸ்.எம். பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, பட்டுக்கோட்டை மணிகண்டன், பொன்னவ ராயன்கோட்டை செல்வமணி, சங்க செயலாளர் சுரேஷ்குமார், காவிரிடெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலாளர் சத்யநாராயணன், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியராஜ், பெரியண்ணன், புலிவலம் வரதராஜன், சங்கர், முருகையன், சேதுராமன், ரமேஷ், ஊடக பிரிவு சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி இருளப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News