உள்ளூர் செய்திகள் (District)

குற்றாலம் அருவிக்கரைகளில் குரங்குகளுக்கு உணவளிக்க தடை

Published On 2023-02-04 09:42 GMT   |   Update On 2023-02-04 09:42 GMT
  • மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.
  • குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். அப்போது மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.

இதனால் சமீப காலமாக குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அதிக அளவில் புறப்பட்டு அருவிக்கரைகளில் நடமாட தொடங்கிவிட்டன. இதனால் அவை உணவுக்காக கடைகளில் புகுவதும், சுற்றுலா பயணிகளை கடித்து காயப்படுத்துவதும் என பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து இன்று மெயினருவி கரையில் வனத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும். அவைகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது தவறு.

இது அவைகளை இடையூறு செய்வதற்கு சமம். எனவே குரங்குகளுக்கு இனி யாரேனும் உணவளித்தால் வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனச்சரக அலுவலர் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்த பலகையில் எழுதப்பட்டுள்ளது.

Tags:    

Similar News