மகிழ்வண்ணநாதபுரத்தில் இடிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டவேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
- தொடக்க பள்ளி கட்டிடம் மாணவர்கள் வகுப்பறைக்கு தகுதியில்லை என இடிக்கப்பட்டது.
- பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் மரத்தின் கீழ் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர்.
தென்காசி:
நெல்லை சாப்டர் பள்ளி கழிவறை கட்டிட தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழக அரசு பலவீனமான அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து மீண்டும் புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது.
இதன்படி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் இனி மாணவர்கள் வகுப்பறைக்கு தகுதியில்லை என இடிக்கப்பட்டது. மற்றொரு வகுப்பறை கட்டிட சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதை பயன்படுத்தவில்லை . இதனால் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் மரத்தின் கீழ் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். இந்த இடத்தில் அருகே பாழடைந்த கட்டிடம், திறந்தவெளி கிணறு உள்ளது. மேலும் மர கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை கட்டவேண்டும் என மாணவ, மாணவிகள் 2 நாட்களுக்கு முன்பு 40 -க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோர்களுடன் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.