உள்ளூர் செய்திகள் (District)

அறிவியல் மையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள்.

விடுமுறை தினத்தையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்

Published On 2023-01-17 09:12 GMT   |   Update On 2023-01-17 09:12 GMT
  • காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
  • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது.

நெல்லை:

பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூரை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர்.

காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் சுற்றுலாத் தலங்களில் ஏராள மானவர்கள் குவிந்தனர்.

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வழக்கமாக வாரவிடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறைநாட்களில் அதிகளவு கூட்டம் காணப்படும். இன்று விடுமுறைையயொட்டி காலை முதலே பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் வரத்தொடங்கினர்.

மதியம் நேரம் பொதுமக்கள் வீடுகளில் தயார் செய்த உணவுகளை கொண்டு வந்து அறிவியல் மையத்தில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். ஊஞ்சல், சறுக்குதளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

வாலிபர்கள் அங்குள்ள டைனோசர் மற்றும் பல்வேறு இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று பிற்பகலுக்கு பின்னர் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் மாவட்ட அறிவியல் மையம் இன்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் சென்று ஆற்றில் நீராடினர். இதை யொட்டி நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் குளித்து சென்றனர். கூட்டம் அலைமோதியதால் சோதனை சாவடியில் இருந்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. களக்காடு தலையணையில் காலை முதலே பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது. ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்டவற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

எனினும் பொதுமக்கள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள பேரூராட்சி பூங்காக்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த உணவை பரிமாறி உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் தென்காசி மாவட்ட போலீசார் அதிகள வில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News