உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டிய விவசாயிகள்

Published On 2023-04-16 05:59 GMT   |   Update On 2023-04-16 05:59 GMT
  • ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்
  • இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.

ஆலங்குடி

தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று முன்தினம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டியில் நல்லேர் பூட்டும் நிகழ்வு நடந்தது.இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் வழிபட்டனர்.

அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது.இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைக்கொண்டு நல்லேரு பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்துவிட்டனர்.இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டினால் விவசாயம் செழிக்கும் என்று தங்கள் முன்னோர்கள் கடைபிடித்து வந்த மாண்பை தாங்களும் ஆண்டு தோறும் அதனை கடைபிடித்து வருவதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையிலே நல்லேரு பூட்டியுள்ளோம் என்று கூறினர்.


Tags:    

Similar News