உள்ளூர் செய்திகள்

13 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த மாங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த முடிவு

Published On 2023-05-27 06:22 GMT   |   Update On 2023-05-27 06:22 GMT
  • 13 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த மாங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்யபட்டது
  • சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புதல்

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும் இக்கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் மண்டகப்படி பெறுவதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தி னையடுத்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு 13 ஆண்டுகளாக திருவிழா கிடப்பில் போடப்பட்டது. மேலும் இது தொடர்பாக இரு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கிராம கட்டுப்பாட்டில் இருந்த கோவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் திருவிழா நடத்துவதென அப்பகுதி பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரை அழைத்து சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு அமைத்து திருவிழா நடத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் திருவிழா நடைபெறும் பொழுது எந்த தரப்பினருக்கும் காவல்த்துறை அனுமதியின்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்த்துறை சார்ந்த அதிகாரிகள் மாங்குடி ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News