உள்ளூர் செய்திகள் (District)

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண் உதவி இயக்குனர் தகவல்

Published On 2023-02-18 09:12 GMT   |   Update On 2023-02-18 09:12 GMT
  • மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்
  • உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 மக்காச்சோளம் பயிரில் ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திற்கு குன்றாண்டார்கோவில் வட்டாரம், நாஞ்சூர்கிராமத்திற்கு விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த பயணத்தில் வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) மதியழகன் கலந்து கொண்டு கூறியதாவது : மக்காச்சோளம் பயிரை ஆடிப்பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்), தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) ஆகிய பருவங்களில் விதைப்பு செய்யலாம். மக்காச்சோளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். தற்போது குறிப்பாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனை முதலில் கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பயிர்சுழற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும். பேவோபியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். வரப்பு பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி, எள், சாமந்திபூ, தட்டைப்பயறு ஆகியவற்றை விதைப்பு செய்யலாம். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். விவசாயி ஆனந்தன் என்பவரது வயலில் இனக்கவரச்சி பொறி பயன்பாடு பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பர்கனா பேகம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News