உள்ளூர் செய்திகள்

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி

Published On 2023-02-25 08:07 GMT   |   Update On 2023-02-25 08:07 GMT
  • நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி அடைந்தனர்
  • பல பயணிகள் நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர்

பொன்னமராவதி:

பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. கொப்பனாபட்டி தேனிமலை, கருகப்பூலாம்பட்டி, காரையூர், கீழத்தானியம். மேலத்தானியம் , இலுப்பூர், விராலிமலை வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டிய அந்த பேருந்தானது, தேனிமலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் குலுங்கி உள்ளது. சத்தம் கேட்டு பயணிகள் திகிலடைந்த நிலையில் பேருந்தை எப்படியோ டிரைவர் நிறுத்தி உள்ளார்.

பேருந்தில் உள்ள பயணிகள் அவசர அவசரமாக இறங்கி சாலைக்கு ஓடி உள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்து ஓடுவதற்கு இன்ஜினும், சக்கரத்தையும் இணைக்கும் சென்ட்ரல் ஜாயிண்ட் உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட இரும்பு ஜாயிண்ட் ஆனது சாலையில் குத்தி இருந்தால் பேருந்தை கவிழ்த்து இருக்கும். நல்லவேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து டிரைவரும், கண்டக்டரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு உள்ளனர்.

இதுவரை நடந்த சம்பவங்கள் பேருந்து பயணிகளுக்கு நிம்மதி பெருமூச்சு விட செய்தாலும், அதற்கு அடுத்து நடந்ததுதான், தொடர்ந்து பெருமூச்சு விடச்செய்துள்ளது.தேனிமலை ரோட்டில் நின்று கொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு வேறு பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் டிரைவரும், கண்டக்டரும் சென்று விட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பயணிகள் அந்த வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால்கைக்காட்டிய பயணிகள் இடையே டிரைவரும், கண்டக்டரும் இல்லாததை கண்டு வந்த பேருந்து டிரைவர்களும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பல பயணிகள் நடராஜா சர்வீஸ்தான் நமக்கு துணை என்ற படி மூட்டை முடிச்சுகளை துாக்கிக்கொண்டு நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பொன்னமராவதியில் ஓடும் பல அரசு பேருந்துகள் இப்படி பிரேக் டவுன் ஆகி வழியில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் போக்குவரத்து அலுவலகம் விழித்துக்கொள்ளும் என்றால் அதற்கும் பொதுமக்கள் தயார் என்று கூறினர்.


Tags:    

Similar News