- பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
- இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகம் பட்டி கிராமத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் சுமார் 29 லட்சம் மதிப்பில் கட்டுவதற்காக குறிப்பிட்ட அளவுகளில் அடையாளம் செய்யப்பட்டு கம்பிகள் அடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டுவதற்கான அடையாளம் செய்யப்பட்ட கம்பிகளையும், ஏனைய பொருட்களையும் கந்தர்வகோட்டை தி.மு.க. நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த சோழகம்பட்டி, மெய்குடி பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். சோலகம் பட்டி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.